மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மசகு எண்ணையை இறக்குமதி செய்ய தீர்மானம்!
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மசகு எண்ணையை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ளெியாகியுள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஏறக்குறைய 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மசகு எண்ணெய்களையும் விற்பனை செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நல்ல போட்டி சந்தையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் எரிசக்தித் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக அடுத்த ஆண்டு புதிய சுயாதீன ஒழுங்குமுறை நிறுவனம் நிறுவப்படும் என்று அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.