பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் மட்டுமே சிறைச்சாலைகளில்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் மட்டுமே சிறைச்சாலைகளில் உள்ளார்கள் என போதே நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் என தற்போது 28,468 சிறைக்கைதிகள் சிறையில் இருக்கின்றனர். இவர்களில் 50.3 வீதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தண்டனை பெறும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தண்டைனைகளை வழங்குவது மாத்திரம் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.
இவர்களுக்கு திறன்விருத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் புனர்வாழ்வளிப்பது அவசியமாகும்.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதும் மீண்டும் அதே தவறைச் செய்வதைத் தடுக்க முடியும்.