இத்தாலிய தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!
இத்தாலிய தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (10.08) அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர். “இத்தாலிக்கு செல்வோர் தொடர்பில் பெருமளவு முறைப்பாடுகள் உள்ளன. போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கையர்கள் இத்தாலி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே போலி முகவர்களால் இது பெரும் வர்த்தகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனை முற்றாக நிறுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அது தொடர்பில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
அதற்கிணங்க கடந்த வாரம் முதல்தடவையாக எமது ஆவணங்கள் பரீட்சைகள் திணைக்களத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு பதிலாக அதனை இணையவழி முறைமையில் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.