ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட ஐ.நா அதிகாரி

ஏமனில் பயங்கரவாதிகளினால் பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐ.நா சபையின் அதிகாரி விடுவிக்கப்பட்டுள்ளார்.
பங்காளதேச முன்னாள் இராணுவ தளபதியான சுபியுல் அனம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு துறை அதிகாரியாக செயற்பட்டு வந்தநிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாத குழுவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஐ.நா சார்பில் சுபியுல் அனம் அனுப்பப்பட்டார். இதன்போது, சுபியுல் அனம் உட்பட நான்கு அதிகாரிகளை உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பணயக் கைதிகளாக தடுத்து வைத்தனர்.
இது தொடர்பில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா காணொளி பதிவொன்றின் மூலம் மீட்பு தொகையாக 248 கோடி ரூபாவை கோரியது.
இந்நிலையில், ஐ.நாவினால் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், பங்காதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றரை வருட முயற்சிக்கு பின் சுபியுல் அனமின் உடல் நலனை காரணம் காட்டி அவரை விடுவித்தனர்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சுபியுல் அனம் உடல்நல பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் கனடாவில் உள்ள தனது குடம்பத்தை சந்திக்கவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



