காசல்ரீ - மவுஸாக்கல நீர்மட்டம் மூன்றில் ஒரு பங்காக குறைந்தது
காசல்ரீ மற்றும் மவுஸாக்கல ஆகிய நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலையினால் இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மவுஸாக்கல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஏற்கனவே 120 அடியில் இருந்து 52 அடியாகவும், காசல்ரி நீர்த்தேக்கத்தின் கடைமட்டம் 155 அடியில் இருந்து 37 அடியாகவும் குறைந்துள்ளது.
இரண்டு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்படும் நீர் கனியன், விமலசுரேந்திர, லக்ஷபான, நவ லக்ஷபான, பொல்பிட்டிய மற்றும் சமனல நீர்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்போது நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வழமை போன்று இடம்பெற்று வருவதாக மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மிகவும் வறட்சியான காலநிலையுடன், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் உள்ள 03 மில்லியன் லீற்றர் நீர் நாளாந்தம் ஆவியாகி வருவதாக, அதற்குப் பொறுப்பான பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார்.
விக்டோரியா நீர்த்தேக்கம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகவும், தற்போது அது 13 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.