13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவை என்ன? : திரான் அலஸ் கேள்வி!
13 ஆவது திருத்தத்தை அமுற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை தமிழ்த் தேசிய கட்சிகள் வலியுறுத்துவது குறித்தும், பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கேட்டறிந்துக்கொண்டார்.
இது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது
இந்த கலந்துரையாடலின்போது உலகின் ஏனைய நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு அதிகாரப்பரவலாக்கத்தின் அவசியத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விளக்கியதுடன், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடினர்.
பொலிஸ் அதிகாரங்களை வகுக்காமல் அப்பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அமைச்சர் திரான் அலஸ் கலந்துரையாடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள், அங்கு பயன்படுத்தப்படும் முறைகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த முடியும் என விளக்கமளித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த திரான் அலஸ், இங்கிலாந்து மற்றும் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என சுட்டிக்காட்டியதுடன், பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவட்டக் குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பிற்கு வரவேண்டியிருப்பதாகவும், சிலரது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆளுநர்கள். பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான உத்தேச விடயங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும், ஆனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுவையும் நியமிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு வாரங்களுக்குள் இதுகுறித்து அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்த இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.