குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்: சரத் வீரசேகர

#SriLanka #Sri Lanka President #Mullaitivu
Mayoorikka
2 years ago
குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்: சரத் வீரசேகர

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தினார்.

 நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “பொருளாதார வீழ்ச்சிக்கு நாம் முகம் கொடுத்துள்ள நிலையில், இதனைப் பயன்படுத்தி தமிழ் அரசியல்வாதிகள் பிரிவினைக்கு முற்படுகிறார்கள். குருந்தூர்மலை என்பது வடக்கிலுள்ள பௌத்த மத்தியஸ்தலமாகும். 

இதனை புராதனச் சின்னமாக அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது, தமிழ் அடிப்படைவாதிகள் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள். முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அதற்கிணங்க, இந்த செய்றபாடுகளை இடைநிறுத்தியுள்ளார். 

இந்தநிலையில், சில குண்டர்கள் அங்கு நுழைந்து புராதனச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளார்கள். அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. 

எமது நாட்டில் பல கோயில்கள் உள்ளன. பௌத்தர்களும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். எனினும், எந்தவொரு கோயிலுக்கும் சென்று புத்தர் சிலையை வைத்து, பிரித் ஓதி பௌத்தர்கள் வழிபடுவதில்லை. ஆனால், முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

 இந்து அடிப்படைவாதிகளுக்கு நீதிபதி இவ்வாறு தொடர்ந்தும் அனுமதி வழங்கிக் கொண்டிருக்கிறார். விகாராதிபதியையும் நீதிமன்றுக்கு அழைக்காமல்தான் இவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது பௌத்தர்களின் மனங்களை புண்படுத்தும் செயற்பாடாகும். 

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாம் தானா இனவாத- மதவாத பிரச்சினைகளுக்கு காரணம்? அல்லது பௌத்த வழிபாட்டுஸ்தலம் ஒன்றில் பொங்கல் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கிய சட்டத்தரணி உள்ளிட்ட நீதிபதியா காரணம் என கேட்க விரும்புகிறேன்.

 இந்த செயற்பாடு தொடர்பாக அவதானம் செலுத்தி, உடனடியாக இந்தநிகழ்வை நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

 வடக்கில், பௌத்த சின்னங்களை அழிக்கும் பல செய்றபாடுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. காணி அதிகாரம் இல்லாமலேயே இவ்வாறு இடம்பெறுகிறது என்றால், காணி அதிகாரம் கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும்? இந்த பௌத்தச் சின்னங்கள் பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, நாட்டிலுள்ள அனைவருக்கும் உரித்தானது என்று நினைக்காத அடிப்படைவாத அரசியல்வாதிகள் இருக்கும்வரை, 13 தொடர்பாக நாம் கதைக்கக்கூட தயாரில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!