ஒவ்வாமையினாலேயே இறப்புக்கள்: கெஹலியவிடம் வழங்கிய அறிக்கையில் தெரிவிப்பு
கடந்த காலங்களில் பல வைத்தியசாலைகளில் ஏற்பட்ட 06 சந்தேக மரணங்களில் 05 மரணங்கள் கடுமையான ஒவ்வாமையினால் ஏற்பட்டவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று (09) வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் ஒவ்வாமை மற்றும் சிக்கல்கள் என சந்தேகிக்கப்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவர், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் டெதுனு டயஸ் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டது. பேராதனை போதனா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படும் ஒவ்வாமை மற்றும் சிக்கல்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியில் ஆராய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்தக் குழு ஜூலை 17ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக இலங்கையில் விவாதிக்கப்பட்ட ஒவ்வாமை தொடர்பான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் பற்றிய பகுப்பாய்வை முன்வைப்பதே அறிக்கையின் நோக்கமாகும். 06 நிகழ்வுகளில் 05 கடுமையான ஒவ்வாமை காரணமாக (Anaphylaxis) ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களுக்குக் காரணமான மருந்துகளின் தரப் பரிசோதனைகள் இன்னும் நடந்துவருவதுடன், அந்தப் பரிசோதனைகளை ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய அதிக நேரம் எடுக்கும் என்பதால், அந்த அறிக்கையில் உள்ள அவதானிப்புகளுடன் விரிவான மதிப்பீட்டுக் குழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தேசிய மருந்து தர உறுதி ஆய்வகம் (NDQAL) ஒவ்வாமை தொடர்பான சம்பவங்கள் தொடர்பான மருந்துகளின் தரப் பரிசோதனையை நடத்துகிறது. அதன்படி, சுகாதார அமைப்பில் மேலும் தயார்நிலை, கண்டறிதல் மற்றும் மேலாண்மைக்கான பரிந்துரைகள் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
நிபுணர் குழுவின் அறிக்கையை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வில் குழுவின் தலைவர் டாக்டர் டெதுனு டயஸ், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு துறை பேராசிரியர் சந்திம ஜீவந்தர, டாக்டர் செனிதா. கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் அவசர மருத்துவ நிபுணர் லியனகே மற்றும் சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.