இலாபமடைந்தும் ஊக்குவிப்பு தொகை வழங்காத பெற்றோலிய கூட்டுத்தாபனம்! கஞ்சன
பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டுக்காக சேவையாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை வழங்கவில்லை.
நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் மாத்திரம் கூட்டுத்தாபனம் 69000 மில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, 2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியியல் ரீதியில் இலாபம் மற்றும் நட்டமடைந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு 20520 மில்லியன் ரூபா நட்டத்தையும், 2016 ஆம் ஆண்டு 53027 மில்லியன் ரூபா இலாபத்தையும்,2017 ஆம் ஆண்டு 1055 மில்லியன் ரூபா இலாபத்தையும், 2018 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 6162 மில்லியன் ரூபா நட்டத்தையும்,2019 ஆம் ஆண்டு 1 1853 மில்லியன் ரூபா நட்டத்தையும்,2020 ஆம் ஆண்டு 2356 மில்லியன் ரூபா இலாபத்தையும்,2021 ஆம் ஆண்டு 81 816 மில்லியன் ரூபா நட்டத்தையும்,2022 ஆம் ஆண்டு 61,553 மில்லியன் ரூபா நட்டத்தையும்,2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் 69000 மில்லியன் ரூபா இலாபத்தையும் கூட்டுத்தாபனம் அடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்காக கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் ஏதும் வழங்கப்படவில்லை.மாறாக 4.2 சதவீத வட்டி என்ற அடிப்படையில் புத்தாண்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
பெற்றோலிய விநியோகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.இவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.