கலால் திணைக்களத்தில் கடமைக்கு இடையூறு விளைவித்த பொலிஸார்- அறிக்கை சமர்ப்பிப்பு!
பம்பலப்பிட்டியில் போதைப்பொருள் வியாபாரிகள் குழுவொன்றை கைது செய்ய சென்ற போது பொலிஸார் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் இதனால் சந்தேக நபர்களை கைது செய்ய முடியாமல் போனதாகவும் கலால் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (09.08) அறிவித்துள்ளது.
அத்துடன் கடமைக்கு இடையூறு விளைவித்த 07 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர்கள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
கடந்த 7ஆம் திகதி பிற்பகல் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வேனில் வந்த சிலர் காரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிவில் உடையில் இருந்த 4 கலால் அதிகாரிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை கலால் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக அதன் அதிகாரிகள் குழுவொன்று பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றை சுற்றிவளைத்ததாகவும், அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மற்றுமொரு குழுவினர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்போது காரில் வந்த தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் தப்பிச் சென்றதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய கடத்தல்காரர்களை கைது செய்ய விசாரணை மேற்கொண்ட போது அவர்களை கைது செய்ய முடியாமல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை பிடிக்க முடியாமல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் கலால் திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கலால் திணைக்களம் 07 பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களுடன் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையை கருத்தில் கொண்டு சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.