கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஐவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்

ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து ஆண்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.
"மே 2022 இல் மராண்ட் நகரில் பெண் ஒருவரைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஐந்து ஆண்கள் இன்று (புதன்கிழமை) தூக்கிலிடப்பட்டனர்" என்று நீதித்துறையின் மிசான் ஆன்லைன் இணையதளம் அறிவித்தது.
கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ஆண்கள் ஏனைய குற்றங்களிலும் ஈடுபட்டதாக மிசான் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆண்களுக்கு ஈரானில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹார்மோஸ்கானின் தெற்கு மாகாணத்தில் பல பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அவர்கள் சதி செய்ததாகக் கண்டறியப்பட்டனர் என அந்த நேரத்தில் மிசான் அறிக்கை செய்திருந்தது.
மனித உரிமைகள் குழுவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஈரான் அதிக மக்களுக்கு மரணதண்டனை விதித்துள்ளது என்றும் கடந்த ஆண்டு குறைந்தது 582 பேரை தூக்கிலிட்டுள்ளதாகவும், இது 2015 இற்குப் பிறகு அதிக எண்ணிக்கையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானில் உள்ள அதிகாரிகள் அனைத்து குற்றங்களுக்கும் ஒட்டுமொத்த தீர்வாக மரணதண்டனைகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளனர்.
2023 இல் இதுவரை மொத்தம் குறைந்தது 282 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.



