சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின் உயிரிழந்த குழந்தையின் விசாரணை குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு
அண்மையில் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குழந்தையின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போது பொலிசார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்ததன் பின்னரே நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் சிறுநீரகங்கள் சரியான இடத்தில் இருந்தமை மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களின் மூலம் தெரியவந்துள்ளதால், அந்த உண்மைகளை கருத்திற்கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நீதவான் குறிப்பிட்டார்.
குறித்த குழந்தையின் அகற்றப்பட்ட சிறுநீரகம் ஒன்று வைத்தியசாலையில் உள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் பொரளை பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் உயிரிழந்த குழந்தையின் தந்தை மொஹமட் நிசார் மொஹமட் ஃபாஸ்லிம் சாட்சியமளித்தார். மேலும் சாட்சிய விசாரணை வரும் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.