2000 கோடி ரூபா தொடர்பில் எவ்வித ஷரத்தும் உள்ளடக்கப்படவில்லை: ஜானக ரத்நாயக்க
இறுதி செய்யப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு சட்டமூலத்தில் மின்சார பாவனையாளர்கள் வைப்புத் தொகையாக செலுத்திய 2000 கோடி ரூபா தொடர்பில் எவ்வித ஷரத்தும் உள்ளடக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனக ரத்நாயக்க, தற்போதுள்ள மின்சாரச் சட்டத்தின் பிரிவு 28, மின்சார நுகர்வோர் வைப்பு செய்யும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று கூறுகிறது.
அரசாங்கம் தயாரித்துள்ள மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான புதிய சட்டமூலத்தின் மூலம் இந்த பிணைப் பணத்தின் பாதுகாப்பு முற்றாக இழக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன நடக்கும் என்று புதிய சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை புதிய சட்டமூலத்தில் இலங்கை மின்சார சபையின் அனைத்து வளங்களும் 15 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பணிப்பாளர் குழு அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி இச்சட்டத்தின் மூலம் மின்சாரத்துறை முழுவதுமாக அரசியலாக்கப்படுகிறது.
அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் ஒரு நிறுவனத்தின் கீழ் வைப்பது என்பதும் புதிய மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
அப்படியானால், நீர்த்தேக்கங்களில் இருந்து விவசாயத்திற்குத் தேவையான நீரை வெளியேற்றும் அதிகாரம் அந்த நிறுவனத்துக்குப் கிடைக்கிறது. ஆபத்தை இந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது.
20 பில்லியனாக இருந்த மின்சார சபையின் மாதாந்த விற்றுமுதல் கடந்த மாதம் 65% மின் கட்டணம் அதிகரித்ததன் காரணமாக 50 பில்லியனாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.