அம்பாறையில் பிரதமரின் கூட்டம்: கதிரையை புறக்கணித்த சாணக்கியன்
புதிய கிராமம் - புதிய நாடு" தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (04) அம்பாறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பிரதமரின் கூட்டத்தில் அதிதிகள் கதிரையை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புறக்கணித்துள்ளார்.
சாணக்கியன் அதிதிகளுக்கான கதிரையை புறக்கணித்து, மக்களோடு மக்களாக அமர்ந்து கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.
இதுதொடர்பில் சாணக்கியன் தெரிவிக்கையில், கிழக்கில் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டுக்கொள்ளாது பாராளுமன்ற உறுப்பினர்களும், அரச ஊழியர்களும் உதாசீனப்படுத்தம் வகையில் நடந்துக்கொள்கின்றனர்.
அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே பிரதமரின் கூட்டத்தில் அதிதிகள் கதிரையை புறக்கணித்து, மக்களோடு மக்களாக அமர்ந்து கூட்டத்தில் கலந்துக்கொண்டேன்.
மேலும், கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் தொடர்பிலான ஆவணம் ஒன்றையும் பிரதமரிடம் கையளித்துள்ளேன்.
ஊழல் தொடர்பான குற்றங்களுக்காக விசாரணை குழுவொன்றினை அமைப்பதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
மக்களுக்கு எதிராக செயல்படும் ஊழல் குற்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடத்து, கிழக்கிற்கு முக்கிய அரச தலைவர்கள் விஜயம் மேற்கொள்ளும் போது, மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்து அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பேன்” என தெரிவித்தார்.




