இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளது
இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021, 2022) 263 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட செயல்திறன் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு (2022) 102 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2021ல் 79 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2022ல் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை காட்டுகிறது.
2020ல் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 82 ஆகும். மேலும், பெண் கொலைகள் தவிர, கற்பழிப்பு, கொலை முயற்சி, பலத்த காயம், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல், பெண்களை உடலுறவுக்காக வழங்குதல் போன்ற 600 வன்முறைக் குற்றங்கள் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான 568 வன்முறைக் குற்றங்கள் பதிவாகியுள்ளன, 2020 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை 595 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.