அஸ்வெசும திட்டம்: தெரிவு செய்யப்பட்டோர் விரைவில் வங்கிக் கணக்கை திறக்க வேண்டுகோள்
நிதி இராஜங்க அமைச்சர் "அஸ்வெசும" சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் இது சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03.08.2023) நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும சமூக நலன்புரித்திட்டத்தில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அவை பரீட்சிக்கப்பட்டு அதில் தற்போது 1,792,265 விண்ணப்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இப்பெயர் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் 10 இலட்சத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகளும், சுமார் 120,000 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளன. தற்போது அவை தொடர்பான பரிசீலனைகள் இடம்பெற்று வருவதுடன், உரிய மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் மறுபரிசீலனை செய்த பின், உரிய இலக்கை அடைய முடியும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
சமுர்த்தி உதவித்தொகை பெறும் சுமார் 1,280,000 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளன. இதில் 887,653 குடும்பங்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளன.
தற்போது, முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்பட்டது போல் வழங்கப்படும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு இந்த அஸ்வெசும வேலைத்திட்டத்தின் ஊடாக எவரும் கைவிடப்படாத வகையிலேயே இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுகிறது.
தற்போது வழங்கப்பட்டுள்ள வங்கிக்கணக்குகள் தொடர்பில் உறுதிப்படுத்தல் பணிகள் நிறைவடைந்ததுடன் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கூடிய விரைவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.