பாலஸ்தீனத்திற்கு அழைத்துச் செல்லப்படவிருந்த 43 இலங்கையர்கள் ஜோர்தானில் கைது

சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பாலஸ்தீனத்திற்கு அழைத்துச் செல்லப்படவிருந்த 43 இலங்கையர்களை ஜோர்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று ஜோர்தான் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ஜோர்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கையர்களை சுற்றுலாப் பயணிகள் என அறிமுகப்படுத்தி அங்குள்ள ஹொட்டலில் தங்க வைத்துள்ளனர்.
இது குறித்து ஜோர்தான் பொது பாதுகாப்பு பணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஹொட்டலை முற்றுகையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜோர்தான் பிரஜைகள், இலங்கையர்களை வேறு இடத்திற்கு இடம் மாற்றியுள்ளனர். இது தொடர்பாக ஹொட்டல் உரிமையாளர் ஜோர்தான் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இலங்கையர்கள் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.



