பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலைமிரட்டல் விடுத்த தனியார் பஸ் நடத்துனர் கைது
வெலிக்கடை பொலிஸாரின் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை “உன்னை நிச்சயமாக கொன்றுவிடுவேன்” எனக் கூறி கொலைமிரட்டல் விடுத்த தனியார் பஸ் நடத்துனர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இராஜகிரிய பிரதேசத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவரை கடந்த 31 ஆம் திகதி பிற்பகல் குறித்த சந்தேக நபரால் அச்சுறுத்தியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சந்தேகநபர் மஹரகம, நீலம்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதுடைய சந்தேகநபரான நடத்துனர் நேற்று (02) கொழும்பு, அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 04 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.