பல கோடிகளை இந்தியர் எனக்கூறி ஏமாற்றிய இலங்கையர் கண்டியில் கைது
இலங்கை கண்டியில் பிறந்த ஒருவர் இந்திய பிரஜை என கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஒருவரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டியில் பிரதான ஹொட்டல் ஒன்றில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு, கட்டணத்தை செலுத்தாது தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுக்கு அமைய கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் சுற்றுலாப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணைகளில் அந்த நபர் இந்தியர் அல்ல இலங்கையர் என தெரியவந்துள்ளதுடன் சுற்றுலா பொலிஸார் சந்தேக நபரை கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தன்னை இந்திய பிரஜையாக காட்டிக்கொண்டு சுவிஸர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளுக்கு செல்ல விசா பெற்று தருவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி பேராதனை பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் கண்டியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்கத்தில் சுமார் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் கல்கிஸ்சை பொலிஸ் பிரிவில் 22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பாக முழுமையான அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சந்தேக நபரின் அடையாளம் உள்ளிட்ட விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவரிடம் விசாரணையில் இப்படி பலர் உலாவுவத்காகவும் தெரியவந்துள்ளது.
இப்படியான குற்றங்களை தடுக்க ஹோட்டல் உரிமையாளர்களும் உதவவேண்டுமெனவும் பொலிசார் கோரிக்கை விடுகின்றனர்.
“வெளி நாட்டு மோகம் உள்ளவர்களே அவதானம்”