நட்சத்திர ஹோட்டல்களுக்கு இறைச்சிக்காக ஆமைகளை எடுத்துச் சென்ற நபர்கள் யாழில் கைது
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு ஆமைகளை தென் பகுதிக்கு ஏற்றிச் சென்ற இருவர் (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மானிப்பாய் பிரதான வீதியிலுள்ள பொலிஸ் வீதித் தடுப்பில் அதன் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான சிறிய லொறி ஒன்றை சோதனையிட்ட போது இந்த நான்கு ஆமைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்கு சிறிய ரக லொறியுடன் அங்கிருந்த சாரதியுடன் மற்றுமொருவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களுக்கு இறைச்சிக்காக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் கட்டி ஆமைகள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 47 வயது மற்றும் யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர்கள் எனவும், அவர்களை யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.