மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இதுதான் காரணம்
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பாதிப்பை ஏற்படுத்திய காரணிகளில் போக்குவரத்துக் கொடுப்பனவு இன்மையே பிரதான பிரச்சினையாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு முதல் வைத்தியர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கப்படாமையால், இது தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ள வைத்தியர்களால் எதிர்காலத்தில் வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை ஏற்படலாம் என நேற்று (31ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், வைத்தியர்களின் போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியர்களுக்கான தனித்துவமான சம்பளக் கட்டமைப்பு மற்றும் வைத்தியர்களின் சந்தை பெறுமதி மற்றும் செயற்திறன் அடிப்படையில் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பன தொடர்பிலான யோசனையொன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விடயங்களை மீளாய்வு செய்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான முறையில் தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக டொக்டர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்தார்.