சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் வெளியிட்ட அறிக்கைகள் பொய்யானவை!
சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் பொய்யானது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் மற்றொரு கிளர்ச்சியைக் கொண்டுவருவதற்காக சிலர் சுகாதாரத்தை மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சுகாதார நிபுணர்கள் சுற்றறக்கை வெளியிடவோ, அல்லது சம்பந்தபட்ட துறையின் தலைவரின் அனுமதியின்றி ஊடகவியாளர்கள் முன் தோன்றி பேசவே தடைவிதிக்கும் வகையில், அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதனை திரும்பப்பெறக்கோரி சுகாதார நிபுணர்கள் அடையாள வேலை நிறுத்தத்தையும் அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரம்புக்வெல்ல, நாட்டின் சுகாதாரத் துறை தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறை ஊழியர்கள் அரச ஊழியர்களுக்குரிய நடத்தை விதிகளை கடைப்பிடிக்கத் தவறினால் சுகாதார செயலாளர் தலையிட வேண்டும் என்று விளக்கிய அவர், மக்கள் வெவ்வேறு அறிக்கைகளை வெளியிடலாம் என்றும் அந்த அறிக்கைகளின் நம்பகத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசாங்க நிர்வாகத் துறைக்கான ஸ்தாபனக் குறியீடு இருப்பதாக கூறிய ரம்புக்வெல்ல, அந்த குறியீடு மீறப்பட்டால், எந்த அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன், திணைக்களத் தலைவர்களின் அனுமதியைப் பெறுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கும் உரிமை அமைச்சின் செயலாளருக்கு உண்டு என்றும் கூறினார்.