இனத்தின் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள நிலப்பரப்பு அவசியம்!
தற்போதைய சூழ்நிலையில் எமக்கு வழங்கப்பட்டுள்ள 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது விட்டால் தமிழ் மக்களின் இருப்புக் கூட கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதை அவர் இவ்வாறு எழுப்பினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளியாகதான் பதின்மூன்றை ஏற்றுக்கொண்டோமே தவிற தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வாக இன்றும் பதின்மூன்றை ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் எமக்கு வழங்கப்பட்டுள்ள 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது விட்டால் தமிழ் மக்களின் இருப்புக் கூட கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காணிகள் பறிபேன பின் சமஷ்டி யாருக்கு தேவை என்றும் கேள்வி எழுப்பினார்.
மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு 13 வது திருத்தத்தில் வழங்கப்பட்ட காணி அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன்,
தமிழ் புத்திஜீவிகள் துறை சார்ந்த நிபுணர்கள் எனப் பலரும் நாட்டை விட்டுத் தொடர்ச்சியாக வெளிநாடுகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழ் இன விகிதாசாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது எனவும் அவர் கூறினார்.
ஒரு இனத்தின் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு நிலப்பரப்பு அவசியம் நிலங்களை இழந்து எமது அடையாளங்களை காக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.