விஷேட அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்!
மினுவங்கொடை ஹொரம்பெல்ல, மஹகம பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மறைந்திருந்த பாதாள உலகக் குழுவின் உறுப்பினரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் சென்றிருந்த போது நடந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. சந்தேக நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணிக்குகே கசுன் லக்ஷித்த என்ற 29 வயதான பாதாள உலகக்குழு துப்பாக்கிதாரி, அதிரடிப்படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அதிரடிப்படையினர் அவரை மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் ஹோமாகமையில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என கருதப்படுகிறது.
சந்தேக நபர் துபாய் நாட்டில் பதுங்கியுள்ள போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சந்தேக நபர் பயன்படுத்திய ரி.56 ரக துப்பாக்கி, அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி விழுந்து கிடந்த இடத்தில் காணப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.