இன அழிப்பைத் தவிர்க்க தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு! அறைகூவ பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் அழைப்பு
சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக அமைந்த 1983 - கறுப்பு யூலையின் 40வது ஆண்டு நிறைவினை அனுஷ்ட்டிக்க பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள், தமிழ் பாடசாலைகள், சங்கங்கள் ஒன்றிணைந்து ஜூலை 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Trafalgar சதுக்கத்தில் எழுச்சிப் பேரணியொன்றை நடாத்த ஒழுங்குகள் செய்யபப்ட்டுள்ளன.
தமிழ் ஈழம் அமைதலே தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கான ஒரே தீர்வு மற்றும் இலங்கையின் சுபீட்சத்திற்கும், ஸ்திரத்தன்மைக்குமான பாதையும் இதுவேதான் என்ற கருப்பொருளில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில், வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள், இன அழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், பேராசிரியர் சுதா நடராஜா (சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் இலங்கையுடனான சமாதானப் பேச்சுக்களில் பங்கெடுத்தவர் ) மற்றும் மூத்த பிரித்தானிய பாராளுமன்ற அங்கத்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் பேச்சுக்கள், கலை நிகழ்வுகள் ஆகியன இடம்பெற உள்ளன.
அத்தோடு தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறியர்களினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி என்பதை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியா வாழ் ஈழத்து எதிர்கால சந்ததியினருக்கு தாயகத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை கூறுவதற்கு 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Trafalgar சதுக்கம் வருவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


