தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானதுதான் - பவித்திரா வன்னியாராச்சி!
வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானதுதான் என அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19.07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “1980ஆம் ஆண்டுகளின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பாலான மக்கள் தமக்கு உரிமமுடைய காணிகளை கைவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த காணிகள் தற்போது காடுகளாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வனவள பாதுபாப்பு திணைக்களத்தில் கீழ் வைத்திருக்க வேண்டியவை. மேலும் பல காணிகள் மக்களின் உரிமம் உள்ள காணிகளாகும். ஆகவே அந்த காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை வைப்பது நியாயமானதுதான்.
இருப்பினும் இந்த காணிகள் தற்போது வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வன,வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்டுள்ளன. இந்த காணிகளை நிச்சயம் விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.