இந்தியா தலைமை ஏற்க வேண்டும்: உருத்திரகுமாரன் மோடிக்கு கடிதம்
ஈழத் தமிழர்களிடையே சர்வதேச ஆதரவுடன் இந்தியா வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கடிதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடந்தகால இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் விளைவாக மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி வீ.ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21ஆம் திகதியன்று டெல்லியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசுவதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை ருத்ரகுமாரன் இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில், ஈழத் தமிழர்களிடையே சர்வதேச ஆதரவுடன் இந்தியா வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கடிதம் மூலம் ருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுக் களத்தை சமன் செய்ய இலங்கை மோசமான இராஜதந்திரத்தையும், போலித்தனத்தையும் பயன்படுத்துவதாக ருத்ரகுமாரன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் வெற்றிகரமான நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம் என்று ருத்திரகுமாரன், மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே, 13வது திருத்தக் கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் பெரும்பான்மையின குடியேற்றங்களுடன் தமிழர் தாயகத்தில் இலங்கையின் ஆக்கிரமிப்புக் குடியேற்றம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கு விரோதமானது மற்றும் ஆபத்தானது என அவரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.