தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது - கஜேந்திர குமார்
பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் 13 ஐ அமல்படுத்துமாறு வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக கூறியிருப்பதன் மூலம் மீண்டும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசிய கட்சிகள் கடிதம் அனுப்பியுள்ளன.
அதன்படி தமிழரசுக்கட்சியினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் உண்மையான பின்னணி குறித்து விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக சமஷ்டி முறையிலான தீர்வை இந்தியா வலியுறுத்தவேண்டுமெனக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
அவற்றுக்கு மேலதிகமாக இம்முறை அனுப்பப்பட்ட கடிதத்தில் 'இலங்கை அரசினால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்' என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.
மாறாக சமஷ்டி முறையிலான தீர்வு வலியுறுத்தப்படவில்லை. ஆகவே அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதற்கு அமைவாக மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகியவற்றையே இலங்கை வழங்கிய வாக்குறுதிகளாக இந்தியா கருதுகின்றது.
எனவே அதனையே மீண்டும் வலியுறுத்தியிருப்பதன் ஊடாக தமிழரசுக்கட்சி தமிழ்மக்களுக்கு மீண்டும் அதே துரோகத்தைச் செய்திருக்கின்றது என்று குறிப்பிட்டார்.