உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல்!
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் நம்பிக்கை நிதி, ஓய்வூதிய நிதி மூலம் கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்வதால் ஈட்டப்படும் வருமானத்தின் மீது விதிக்கப்படும், வருமான வரி விகிதத்தை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.