தற்செயலாக தான் இலங்கையில் கால்பதித்தாரா ரஜனிகாந்த்?வெளியான அரசியல் உள்நோக்கம்
ரஜினிகாந்த் உலகில் பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டிருந்த போதிலும் இலங்கைக்கு அவர் வருகைதந்திருக்கவில்லை. ஆனால், இன்று முதல்முறையாக அவர் இலங்கை மண்ணில் கால்பதித்துச் சென்றுள்ளார். ரஜினிகாந்த் தன்வாழ்நாளில் ஒருமுறையாவது இலங்கைக்கு வருகைதர வேண்டுமென அளவுகடந்த விருப்பத்தை கொண்டிருந்தவர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத்தந்துச் சென்றுள்ளார். இதன்மூலம் அவரது எதிர்பார்ப்பு ஓரளவேனும் பூர்த்தியாகியிருக்கும். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஊடாக மாலைத்தீவுக்கு பயணம் செய்யும் வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் உலகளாவிய ரீதியில் இணையத்தில் வைரலாகியுள்ளன. இலங்கையில் கால்பதித்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்கள் அன்பான வரவேற்பையும் அளித்துள்ளனர்.
ஆனால், அவர் இலங்கை மண்ணில் கால்பதித்துள்ளமை தற்செயலாக நடத்த ஒருவிடயமல்ல. கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக்கு வருகை தர அவர் எடுத்த முயற்சிகள் ஒருமுறை இருமுறை அல்ல. இறுதியாக வவுனியாவில் லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட 150 புதிய வீடுகளை பயனாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வதற்காக இலங்கைவர உறுதியளித்திருந்தார். ஆனால், பலமுறை முயற்சிகளை மேற்கொண்டும் தமிழகத்தில் அவருக்கு எதிராக வலுப்பெற்ற அரசியல் கருத்துகளால் அந்த முயற்சியை அவர் கைவிட்டிருந்தார்.
இலங்கையில் இருந்து தமிழகம் செல்லும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் ரஜினியை இலங்கைவருமாறு அழைப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் அண்மையில் அவரது இல்லத்தில் சந்தித்திருந்ததுடன் இந்தியாவுக்கான இலங்கையின் சுற்றுலாத்துறை தூதராக செயல்படவும், இலங்கைக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், ரஜினிகாந்த் வருகையின் மூலம் இலங்கையின் சினிமா, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும் எனவும் இச்சந்திப்பின் போது டி.வெங்கடேஷ்வரன் கூறியிருந்தார்.
குறிப்பாக இலங்கையில் உள்ள ராமர் பாதை, பெளத்த தலங்களை ரஜினிகாந்த் பார்வையிட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அத்தருணத்தில்கூட நடிகர் ரஜினிகாந்த் இதற்கு ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும் என தமிழ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இலங்கை மண்ணில் கால் பதித்ததன் மூலம் ரஜினிகாந்த் தன் வாழ்நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து தினமும் பல நேரடி விமான சேவைகள் மாலைத்தீவுக்கு இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது இந்தியாவிலேயே பல விமான சேவைகளும் உள்ளன.
ஆனால், ரஜினிகாந்த் வருகைதந்தது ஸ்ரீலங்கன் விமான சேவையில். அதுவும் இலங்கை ஊடாக பயணிக்கும் விமானத்தில்.
இலங்கை எதிர்கொண்டுள்ள இக்கட்டான இந்த பொருளாதார நெருக்கடிக்கு சுற்றுலாத்துறை வளர்ச்சியின் மூலமே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இவ்வாறு பிரபல்யமானவர்கள் இலங்கைக்கு வருவதன் ஊடாக பல நன்மைகள் ஏற்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் கால்பதித்தமை வரும் நாட்களில் பெரும் பேசுபொருளாக மாறும் என்பது நிதர்சனம்.