குருந்தூர்மலையில் பதற்றமான சூழ்நிலை: சிங்கள இனவாதிகள் குவிப்பு! திட்டமிட்டபடி பொங்கல் நடைபெறும்!
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இன்றைய தினம் திட்டமிட்ட வகையில் பொங்கல் நிகழ்வு இடம்பெறுவதற்கு சிங்கள இனவாதிகளும், பிக்குகளும் இடையூறு விளைவிப்பதாக தெரியவருகின்றது.
இதன்காரணமாக குருந்தூர்மலையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
பொங்கல் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். இந்தநிலையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அந்தவகையில் இன்று பொங்கலிற்காக அங்கு மக்கள் சென்ற போது சிங்கள கடும்போக்காளர்கள் அழைத்து வரப்பட்டு அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே அங்கு பொங்கல் வைப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளை அங்கு வந்த பொலிஸாரும் தொல்பொருள் திணைகள அதிகாரிகளும் இடையூறு விளைவித்து பொங்கலிற்கு தடை ஏற்படுத்தியுள்ளனர்.
இதேவேளை குருந்தூர் மலையில் இன்றைய தினம் திட்டமிட்ட வகையில் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து கல்கமுவ சாந்தபோதி தேரர் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கும் எதிராக அவர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.