560 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத பொருட்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 6 பேர் கைது
ஜாஎல நகரிலுள்ள அரச வங்கிக்கு முன்பாக 560 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத பொருட்களுடன் நேற்று முன்தினம் (12ஆம் திகதி) இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 57 வயதான தாய், 32 வயது மகன் மற்றும் 26 வயது மருமகள் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களுடன் மொண்டேரோ ரக சுப்பர் ஜீப் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அந்த ஜீப்பில் வந்ததாகவும் மேலும் மூவர் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஜாஎல பிரதேச புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியோருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உயர்மட்ட வர்த்தகர் போன்று வேடமணிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுற்றிவளைத்து சந்தேக நபர்களை கைது செய்ததாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.
1996 ஆம் ஆண்டு இலக்கம் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் 29 ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் வலம்புரியின் உரிமையாளர் என கூறிக்கொள்ளும் 57 வயதுடைய தாயார் பொலிஸாருக்கு வாய்மொழியாக பதில் அளித்துள்ளார்.
தனது குடும்பத்திற்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் தரகர்கள் மூலம் விற்பனை செய்யுமாறு கொள்வனவு செய்தவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவர் தனது வாகனத்தில் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிரிந்திவெல, திஹாரிய, அங்கொட மற்றும் மருதானை பிரதேசங்களில் வசிக்கும் 26 முதல் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மற்றும் பொருட்கள் நேற்று (13ம் திகதி) வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தன.