ஜனாதிபதியாகும் நோக்குடன் பசில் ராஜபக்ஷவே நெருக்கடிகளை தீவிரமாக்கினார் - உதய கம்மன்பில!
ஜனாதிபதியாகும் நோக்கத்துடன் பசில் ராஜபக்ஷவே பொருளாதார நெருக்கடியை தீவிரமாக்கினார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நிதி வங்குரோத்து பிரச்சினை குறித்து ஆராய, சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு பயனற்றது எனவும் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தை பலவீனப்படுத்தி பாராளுமன்றத்தின் ஊடாக பொதுஜன பெரமுனவின் பலத்துடன் ஜனாதிபதியாகும் நோக்கத்தோடு பஷில் ராஜபக்ஷ பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தினார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அமைச்சரவையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டபோது பஷில் ராஜபக்ஷ அதற்கு தடையாக செயற்பட்டார் என சுட்டிக்காட்டிய கம்மன்பில, பஷில் ராஜபக்ஷ வகுத்த திட்டம் நிறைவேறியது எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பாதிப்புக்கு பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், தலைமையில் நிதி வங்குரோத்து நிலையை ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கபுடாவின் குழுவில் அங்கம் வகிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.