ஜனாதிபதியின் இலக்கு வறுமையை ஒழிப்பதல்ல! இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
ஜனாதிபதியின் இலக்கு வறுமையை ஒழிப்பதல்ல!  இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தவிர வறுமையை ஒழிப்பதல்ல. 

ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குகளை நலன்புரி அரசின் மூலம் அடைய முடியாது என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

 நேற்று (11) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 1.2 மில்லியன் மக்களை உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைத்து அவர்களை வலுவூட்டும் திட்டம் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், பாடசாலை செல்லும் வயது முதல் முதியோர் வரை பாதுகாத்தல் மற்றும் வலுவூட்டும் வேலைத்திட்டம் இதில் உள்ளடங்கும் என்றும் குறிப்பிட்டார்.

 அஸ்வெசும பலன்களைப் பெறுவதற்கான மேன்முறையீட்டுக் கால அவகாசம் கடந்த 10ஆம் திகதி நிறைவடைந்ததாகவும், தகுதியுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதினால் மேலும் அது நீடிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இம்முறை விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு அல்லது மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், சமூகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த விமர்சனத்திற்கு விடையாக “அஸ்வெசும” திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். 

சமுர்த்தி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. குறிப்பாக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் சமூக வலுவூட்டல் முறைமை இல்லை என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக சமூக வலுவூட்டல் முறைமையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் சமூக நலன்புரி நன்மைகள் சபை “அஸ்வெசும” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. 

“அஸ்வெசும” வேலைத்திட்டம் என்பது அரசியல் இல்லாத வெளிப்படையான செயல்முறையாகும். அந்த செயல்முறைக்குள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் தகுதியுடையவர்களை உள்வாங்கும் மற்றும் தகுதியற்றவர்களை நீக்கும் செயல்முறையும் இதில் அடங்குகின்றது.

 சுமார் 1.2 மில்லியன் மக்களை உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைத்து அவர்களை வலுவூட்டும் பணியை ஜனாதிபதி எமது அமைச்சிடம் ஒப்படைத்தார். இது தொடர்பான திட்டம் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். இது 03 வருட திட்டமாகும், அந்த காலப்பகுதியில், இப்பிரிவினர் வலுவூட்டும் செயற்பாடு மேற்கொள்ளப்படும்.

 மேலும், சமூக வலுவூட்டல் பணியில் கல்வி சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை. பயிற்சி பெற்ற தொழில்வல்லுநர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த முழுத் திட்டத்திற்கும் எமக்கு சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சமுர்த்தி வங்கி கட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவு கிடைக்கின்றது. 

அதன்படி, இலங்கையில் எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கி கட்டமைப்பை பயன்படுத்தி, வறுமையை ஒழிப்பதற்காக அல்ல, பணக்காரர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இன்று சில அரசியல்வாதிகள் சமுர்த்தி வங்கி தொடர்பில் தவறான கருத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அஸ்வெசும வேலைத்திட்டத்தின் ஊடாக சமுர்த்தி வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வங்கி கட்டமைப்பு என்பன மிகவும் செயற்திறனுடன் முன்னெடுக்கப்படுகின்றன. அஸ்வெசும செயல்முறையை சரியாக மேற்கொள்ள முறையான பொறிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அதன் மேல்முறையீட்டு காலம் கடந்த திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தது. அதை மேலும் நீடிப்பதால் தகுதியானவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். 

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல், இம்முறை விண்ணப்பிக்க முடியாதவர்கள் அல்லது மேல்முறையீடு செய்ய முடியாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் இந்த நன்மைகளுக்கு தகுதி பெறுகின்றனர் மற்றும் சிலர் பல்வேறு காரணங்களால் நீக்கப்படலாம்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தவிர வறுமையை ஒழிப்பதல்ல. அதற்குத் தேவையான பின்னணிதான் இது. எங்களுக்கு நலன்புரி அரசு தேவையில்லை. 

தொழில் முனைவோர் அரசொன்றையே நாம் உருவாக்க வேண்டும். ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குகளை நலன்புரி அரசின் மூலம் அடைய முடியாது. அதற்கான வேலைத்திட்டத்தைத்தான் நாம் முறையாக முன்னெடுத்துச் செல்கிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!