கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: விசாரணை கோரி போராட்டம்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தகுறித்த போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதைகுழி தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் இவர்கள் தாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் நீர்வழங்கலுக்கான குழாய்கள் பதிக்கப்படுவதற்காக தோண்டப்பட்ட போது உடல் எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டு நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

