மண்டைதீவு கிணற்றில் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞர்களின் உடல்கள்! பாராளுமன்றத்தில் சிறிதரன்
இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல இந்த மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றிலும் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்டபாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
எமது நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக் கூடுகளே இன்று மீட்கப்படுகின்றன. இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல இந்த மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுட சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும்.
இதன் காரணமாகவே இலங்கை இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளைப் பறித்து வைத்திருக்கின்றனர். சில காணிகளை விடுவிக்காமலும் இருக்கின்றனர்.
மண்டைதீவில் சதாசிவம் செந்தில் மணி, வைரவநாதன் மகேஸ்வரி உள்ளிட்ட பலரின் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கின்றனர். இதனால் குறித்த காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் இலங்கையின் பல பிரதேசங்களில் அகதிகளாக வாழ்கிறார்கள்.
நல்லிணக்கம் குறித்து அதிகம் பேசும் அரசாங்கம், சமாதானம் பேசும் அரசாங்கம் தொடர்ந்தும் அப்பாவி மக்களது காணிகளை அபகரிக்க நினைப்பது மிக மோசமான செயற்பாடுகளாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.