அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவித்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் தாய் நிறுவனம்

டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக ஐந்து பேருடன் பயணித்து விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் தாய் நிறுவனமான OceanGate அதன் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
“அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியுள்ளதாக” OceanGate நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் பாகிஸ்தானிய-பிரிட்டிஷ் செல்வந்தர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் உட்பட ஐவர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த நிலையில், விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஜூன் 18 அன்று டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதுடன் அமெரிக்க கடலோரக் காவல்படை ஜூன் 22 ஆம் திகதி கப்பல் ஒரு பேரழிவுகரமான வெடிப்பைச் சந்தித்ததாகக் கூறியிருந்தது.
இந்த அறிவிப்புடன், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை மீட்பதற்கான நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷும் ஒருவர் ஆவார்.
கடந்த வாரம் கடலின் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களில் இருந்து மனித எச்சங்களை மீட்டு கிழக்கு கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரண்டு மைல்களுக்கும் (கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர்கள்) ஆழத்தில் வடக்கு அட்லாண்டிக் கடலின் அழுத்தத்தின் கீழ் ஒரு சிறிய காரின் அளவான டைட்டன் கப்பல் வெடித்தபோது பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.



