பொய் முறைப்பாடு செய்த நிறுவன தலைவர் உட்பட 4 பேர் விளக்கமறியலில்
தமது வீட்டின் வாயிலில் யாரோ துப்பாக்கியால் சுட்டதாக பொரளை பொலிஸில் பொய் முறைப்பாடு செய்த பிரபல நிறுவனமொன்றின் தலைவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய நேற்று (05) பிற்பகல் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களான கிஹான் சஜித் ராஜபக்ஷ, சிறில் ரத்நாயக்க, ஜானக ஜயதிலக்க மற்றும் ரங்கிக லியனகே ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இனந்தெரியாத நபர் ஒருவர் தனது வீட்டு வாயிலில் துப்பாக்கியால் சுட்டதாகவும், தனது தொழிலில் பணத்தை முதலீடு செய்த சிலரின் வழிகாட்டுதலின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சந்தேகம் கொண்ட வர்த்தகர் கடந்த 22 ஆம் திகதி பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
விசாரணையின் போது, முறைப்பாடு பொய்யானது என்பது தெரியவந்ததையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட T56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள், முறைப்பாட்டாளர் வியாபாரி மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மேலும் 3 பேரை கைது செய்து சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் துப்பாக்கி வேறு குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதா என்றும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொரளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனக விதானகே தனது மேலதிக விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.