ஆசிய வங்கியின் உதவுடன் நீர்வழங்கல் பிரச்சினைகளுக்கான சவால்களை எதிர்கொள்ள தயார்! ஜீவன்
நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு திறம்பட முன்னெடுப்போம் என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்தோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்ற ஆதரவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோ (Takafumi kadono) ஆகியோருக்கும் இடையில் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
நானும், எனது அமைச்சும் நீர்வழங்கல் பிரச்சினைகளுக்கான சவால்களை எதிர்கொள்ளவும், சீர்திருத்தங்களை திறம்பட மற்றும் திறமையாக வழங்கவும், அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான முறையில் குடிநீரை வழங்கவும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட தீர்மானித்துள்ளோம்.