பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படைவீரர் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான் பலுாசிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 படைவீரர் கொல்லப்பட்டுள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணம், ஷெரானி மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். உடனே, பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
சுமாா் 2 மணி நேரம் நடந்த இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினா் 4 போ் உயிரிழந்தனா். பயங்கரவாதி ஒருவரும் கொல்லப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தலிபான்கள் எனப்படும் டிடிபி என்ற பயங்கரவாத அமைப்பு, அரசுடனான சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு நவம்பரில் முடித்துக்கொண்டது.
அதன்பிறகு கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கராச்சியில் சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் கையெறிகுண்டு தாக்குதலில் காவலா் ஒருவா் காயமடைந்தாா்.
சென்ற வாரம் ஜுன் 24 ஆம் திகதி பலுாசிஸ்தான் மாகாணத்தின் தர்பட் நகரில் தற்கொலைப்படையினரின் தாக்குதலில் காவற்துறையை சேர்ந்த அதிகாரியொருவர் மரணமடைந்ததுடன் இருவர் காயமுற்றனர்.



