மே 09 சம்பவம் : அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம் - பந்துல குணவர்த்தன!
மே 09 சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்காமல் இருப்பதையிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 'அரசியல் வாழ்க்கையில் பல சவால்களை கடந்துள்ளோம். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவர்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார்கள்.
ராஜபக்ஷக்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு காலம் பதில் சொல்லும். கடந்த ஆண்டு மே 09 ஆம் திகதி காலி முகத்திடல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மக்கள் பிரதிநிதி ஒருவர் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்காமல் இருப்பதையிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம்' எனக் கூறினார்.