இலங்கை வரும் நாசாவின் விஞ்ஞானிகள் குழு!
நாசாவின் விஞ்ஞானிகள் குழுவொன்று இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் உள்ள கற்களுக்கும் இலங்கையில் காணப்படும் கற்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்த குழு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில், கினிகல்பலஸ்ஸ மற்றும் இண்டிகொலபலஸ்ஸ பகுதிகளுக்கு விஜயம் செய்யும் குறித்த குழுவினர், பின்னர் நாட்டின் தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பகுதிக்கு பயணிக்கவுள்ளனர்.
இது குறித்த கருத்து வெளியிட்டுள்ள நாசாவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த, கருணாதிலக்க, இலங்கையின் புவியியல் அம்சங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கபுகொல்லே ஆனந்தகித்தி தேரர், இந்தப் பிரதேசங்களில் நீல பளிங்கு பாறை (நீல் கருடா) மற்றொன்று நிலவுக்கல் (சந்திரகாந்தா)"ஆகிய இரண்டு வகையான பாறைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வதற்கே நாசா குழுவினர் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.