மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் முதல் கொழும்பிற்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான புகையிரத பாதையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றமையினால் கடந்த ஜனவரி மாதம் 05 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை புனரமைக்கப்படவிருந்த நிலையில், அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது எனினும், அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் மழைக்காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது