இலங்கை மீது குற்றம் சுமத்தும் ஐ.நா: அழுத்தம் கொடுக்க வலியுத்தி அமெரிக்காவில் சந்திப்புக்கள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான வலுவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையை சமர்ப்பித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், “இலங்கையில், பொறுப்புக்கூறல் தொடர்பான சபையின் தீர்மானங்களின் அம்சங்களை அரசாங்கம் வருந்தத்தக்க வகையில் நிராகரித்த போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் எங்களுடன் இருந்து வருகின்றது என தெரிவித்தார்.
இதேவேளை ஜெனிவாவில் அமர்வுகள் நடந்துகொண்டிருந்தபோது, அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உலக தமிழர் பேரவையினர் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் "தெற்காசியாவில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அமெரிக்கா ஆதரிக்கிறது" என்று லு பின்னர் ட்வீட் செய்தார்.
மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அணுகுமுறைகள் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.
அத்தோடு உலக தமிழர் பேரவை தூதுக்குழுவானது, குற்றவியல் நீதிக்கான தூதர் பெத் வான் ஷாக்கையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர்.
“நீதி தொடர்பான பயனுள்ள ஆலோசனைகளில் புலம்பெயர் மக்களின் குரல்களும் அடங்கும் என சந்திப்புக்குப் பிறகு அவர் ட்வீட் செய்தார்.
இலங்கையில் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.
இதேவேளை "நீண்ட கால தாமதமான" மாகாண சபைத் தேர்தல்கள் குறித்தும் விவாதித்ததாக தமிழ்மக்கள் பேரவை கூறியதுடன், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்தியது.
இதேவேளை ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான பிரிட்டன் தூதர் ரீட்டா பிரெஞ்ச் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், “மக்களின் காணிகளை கையளித்தல், அரசியலகைதிகளில் விடுதலை மற்றும் ஊழல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் ஆரம்ப நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்குவதற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு அடிப்படையாக அமையும்.
மேலும் “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் நாங்கள் கவலையடைந்துள்ளோம். பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைப்புக்கள் போன்றவற்றைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
“இலங்கை நல்லிணக்கத்திற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும்போது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், உள்ளடக்குதல் மற்றும் கடந்த கால வேலைகள் மற்றும் முரண்பாடுகள் மற்றும் தண்டனையின்மைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் பரிந்துரைகளை அர்த்தமுள்ளதாக கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.