அஸ்வசும பயனாளிகளுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது: விசேட அறிவிப்பு
அஸ்வசும பயனாளிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது என்பதை அரசு வலியுறுத்துகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் மக்களுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வசும திட்டத்திற்கு அரசியல் முகம் கொடுத்து தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட சில கட்சிகளின் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேன்முறையீட்டு காலத்தில் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொண்டு அரசியல் தூண்டுதல்கள் அல்லது வேறு வெளி தாக்கங்களுக்கு அடிபணியாமல் உடனடியாக மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறு அந்த அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நலன்புரி நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஜூலை 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் தனிப்பட்ட முறையில் வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஷான் சேமசிங்க டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் முறையைப் பயன்படுத்த முடியாத ஒருவர்இ அதற்கேற்ப மேல்முறையீடுகளையும் ஆட்சேபனைகளையும் சமர்ப்பிக்கலாம். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் 1924 என்ற அவசர தொலைபேசி எண்ணில் தேவையான தகவல்களைப் பெறலாம் என்று பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை சுமார் 17,000 முறையீடுகள் பெறப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஏழை மக்களை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் 'அஸ்வசும' நலத்திட்ட உதவித் திட்டம், தற்போது மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
ஆதரவாளர்கள் குழுவொன்று இன்று காலை ஆராச்சிக்கட்டு மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, பண்டாரகம, மில்லனிய, பல்லந்துடாவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெற்றோர்கள் அஸ்வசும திட்டத்தின் மூலம் பல வருடங்களாக பெற்று வந்த சமுர்த்தி உதவித்தொகை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.