பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுங்கள்!
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் சந்தித்துள்ளனர்.
லண்டனில் அண்மையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பான புதிய அறிக்கையின் பிரதிகளை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது பெற்றுக்கொண்டனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தினால், இன்று முற்பகல் மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா, ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் இருப்பதாகவும், ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெற்றுத்தர வேண்டி யாழ் மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐநாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இம்முறை 53 வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரிலாவது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெற்று தருமாறு இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மன்றாடி வேண்டுகோள் விடுத்தனர்.