ஊடகங்களின் வாயை அடைக்கின்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்!
ஊடகங்களின் வாயை அடைக்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் நிச்சயமாக எதிர்காலத்தில் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள் மிகவும் பாதிக்கப்படும் என சமூக செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்தார்.
சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அருந்தவபாலன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஊடகங்களை ஒழுங்குபடுத்துகின்ற சட்டங்கள் இன்னும் முழுமையாக வெளிவராத போதிலும் அந்தச் சட்டங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியிலும்-ஊடகங்கள் மத்தியிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை மிக அவதானமாக கையாள வேண்டும்.ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில் நிர்வாகம் மற்றும் நிதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதால் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதிலும்-ஆளுபவர்களுடைய அதிகார துஸ்பிரயோகங்களை வெளிகொண்டு வருவதிலும் ஊடகங்கள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன.
அந்தவகையில் ஊடகங்களை ஒழுங்குபடுத்துகின்ற சட்டங்கள், ஆட்சியாளர்கள் தமக்குத் தேவையான வகையில் செயற்படுவதற்கான அனுமதியை வழங்குவதாக இருக்கக்கூடாது என்பதில் சகலரும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.
இலங்கையில் உருவாக்கப்படுகின்ற பெரும்பாலான சட்டங்கள் நாட்டிற்கானவையாகவோ அல்லது மக்களுக்கானவையாகவோ இருப்பதனை விட ஆட்சியில் உள்ளவர்களுக்காகவே பெரும்பாலும் உருவாக்குவதனை கடந்த கால வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனக்கு ஏற்ற வகையில் ,எதிர்காலத்தில் உருவாகக்கூடிய மக்களின் எதிர்ப்புக்களை அடக்குகின்ற நடவடிக்கைக்கு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை கொண்டு சென்று விடுவாரோ என்ற ஐயம் எம் மத்தியில் உள்ளது.
ஊடகங்களை ஒழுங்குபடுத்துகின்ற சட்டங்கள் பற்றி மக்களுக்கு தெளிவான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் இந்த சட்டம் தொடர்பாக மிகத்தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் ஊடகங்களிற்கான அனுமதி பத்திர முறைமை கொண்டு வரப்பட்டு ஊடக அனுமதியை இரத்துச் செய்கின்ற ஓர் உறுப்பும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இது முழுக்க முழுக்க ஜனநாயகத்தினை குழி தோன்றிப் புதைக்கும் செயற்பாடு.
அதாவது ஆட்சியாளர்கள் தமக்கு எதிராக இருக்கக்கூடிய மற்றும் மக்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஊடகங்களை இல்லாமல் ஒழிக்கும் அல்லது அடக்குகின்ற சட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த சட்டம் ஊடாக ஊடகங்களின் வாயை அடைக்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் நிச்சயமாக எதிர்காலத்தில் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள் மிகவும் பாதிக்கப்படும். எனவே ஊடகங்களை அடக்குகின்ற, ஊடகங்களை ஊடக பரப்பில் இருந்து அகற்றுகின்ற சட்டங்களை எவரும் அனுமதிக்கக்கூடாது - என்றார்.