7.7 மில்லியன் டாலருக்கு விற்பனையாக உள்ள ரூபன்ஸ் ஓவியம்
கலைப்பொருட்களை சேகரித்து ஏலம் மூலம் விற்பனை செய்யும் உலகின் பிரபலமான நிறுவனமான சோத்பி நிறுவனம், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
உலகின் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் இந்த நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளன. இந்நிலையில், நூற்றுக்கணக்கான வருடங்களாக தவறாக அடையாளம் காணப்பட்ட, "பீட்டர் பால் ரூபன்ஸ்" வரைந்த ஓவியம் ஒன்று, லண்டனில் உள்ள சோத்பி ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது.
இது ஏலத்தில் கிட்டத்தட்ட 7.7 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓவியத்தை வரைந்தவரின் உண்மையான ஓவியர் ரூபன்ஸ் என கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதனை விற்பதற்கான முதல் முயற்சி இதுதான்.
கடைசியாக அந்த ஓவியம் 2008ம் வருடம் 40000 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது. அப்பொழுது அந்த ஓவியத்தை வரைந்தது பிரான்ஸ் நாட்டு ஓவியரான "லாரண்ட் டி லா ஹைர்" என்பவர் என தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஓவியத்தை, ஓவியர் ரூபன்சின் காணாமல் போன ஓவியம் என்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர். இதற்கு முன்பு, இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள "கேலரியா கோர்ஸினி" எனும் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியத்தின் பெயர், "செயிண்ட் செபஸ்டியன் டெண்டட் பை ஏஞ்சல்ஸ்" என்று தவறுதலாக கண்டறியப்பட்டிருந்தது.
ஜெர்மனியில் 2021ம் வருடம் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இரண்டு ஓவியங்களும் அருகருகே வைக்கப்பட்ட பொழுது, தற்பொழுது ஏலத்திற்கு வந்திருக்கும் ஓவியம்தான் அசல் ரூபன்ஸ் ஓவியம் என்றும் "கேலரியா கோர்ஸினி" அரங்கில் உள்ளது அதனுடைய நகல் என்றும் உறுதிபட தெரிவித்தனர்.