பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது!
ஹோமாகம, கொட்டாவ மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
11 மணி நேரத்தில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஹோமாகம, நியடகல பிரதேசத்தில் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னைய குற்றத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இன்று காலை கொட்டாவ பகுதியில் உள்ள ஆய்வு கூடத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொஸ்கொட, இத்தருவா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியது பிஸ்டல் ரக துப்பாக்கியால் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் குளியாபிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதுடைய சந்தேகநபரிடம் துப்பாக்கி, அதற்கான தோட்டா, ஹெரோயின் மற்றும் 60,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.