முழு வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க, முழு வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இதனூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதான தேவையற்ற தலையீடுகளை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
சட்டவிரோத குடியேற்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையற்ற தலையீடுகள் மற்றும் தவறுகளை களைவதற்கு வெளிநாட்டு சேவைத்துறையை முழுமையாக டிஜிட்டல்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக நிதியமைச்சு தேவையான முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதனை அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை மனிதக் கடத்தல்காரர்களின் செயல்பாடுகளை தடுக்க உதவும். அதேபோல், தொழிற் துறையையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி மற்றும் E-சம்பள சேவை உள்ளடங்கிய டிஜிட்டல்மயமாக்கலுக்குத் தேவையான கேள்விமனு நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைத்துத் தொழில்களுக்குரிய மதிப்பு கிடைக்கும் வகையில் அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நாட்டில் எந்த தொழிலும் பதிவு செய்யப்பட வேண்டும். நாட்சம்பளம் பெறும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு பலன்களை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதை முற்றாக நிறுத்த அவசியமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஊழியர் சேமலாப நிதியத்தை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கட்டமைப்பொன்றினை நாம் முன்னெடுத்துச்செல்வோம் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.